சூரபத்மனை வென்ற முருகப் பெருமான் இத்தலத்திற்கு வந்து தமது வேலால் தீர்த்தம் உண்டாக்கி சிவபூஜை செய்து வழிபட்டார். அதனால் இத்தலம் 'வேளூர்' என்று அழைக்கப்பட்டது. இதே பெயரில் வேறு ஊர்கள் இருப்பதால் கீழ்வேளூர்' என்று அழைக்கப்படுகிறது. எந்த கேடு வந்தாலும் அதை தீர்ப்பவராக இருப்பதால் இத்தல மூலவர் 'கேடிலியப்பர்' என்று பெயர் பெற்றார்.
மூலவர் 'கேடிலியப்பர்', 'அட்சயலிங்கேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், உயர்ந்த பாணத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'வனமுலை நாயகி', 'சுந்தரகுஜாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் அஞ்சு வட்டத்தம்மன் சன்னதி உள்ளது. சிவபூஜை செய்பவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த அம்மன் காவல் தெய்வமாக இருப்பதாக ஐதீகம்.
உள்பிரகாரத்தில் பத்ரி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், பத்ரகாளி, நடராஜர், அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
வெளிப்பிரகாரத்தில் பாலசுப்பிரமண்யர், அகத்தியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, குபேரன், தேவேந்திரன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
அகத்திய முனிவருக்காக இத்தலத்தில் நடராஜர் கால் மாறிய ஆடினார் என்று தல வரலாறு கூறுகிறது.
இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று இக்கோயில்.
முருகப்பெருமான், பிரம்மா, இந்திரன், குபேரன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|